அரசுபொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்தால் பரிசுமழை தென்காசி எம்.எல்.ஏ மாணவர்களுக்கு இன்பஅதிர்ச்சி தந்தார்
நடைபெறும் அரசு தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவ, மாணவிகளுக்கு தனது சொந்த நிதியில் ரொக்க பரிசு வழங்கவிருப்பதாக தென்காசி எம்எல்ஏ செல்வ மோகன்தாஸ் பாண்டியன் தெரிவித்தார்.
சுரண்டை அருகே உள்ள ஆனைகுளம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை தென்காசி எம்எல்ஏ செல்வ மோகன்தாஸ் பாண்டியன் வழங்கினார். அப்போது பேசிய அவர் தமிழக அரசு அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் விலையில்லா பொருட்களை வழங்கி வருவதாகவும், அதிலும் குறிப்பாக மாணவ, மாணவிகளுக்கான பல்வேறு பொருட்களை வழங்குவதாகவும் அதனை பயன்படுத்தி மாணவ மாணவியர் உயர்ந்த நிலைக்கு வர வேண்டும் எனவும், நடப்பு கல்வியாண்டில் அரசு பொதுத்தேர்வுகளில் பத்தாம் வகுப்பில் 450 மதிப்பெண்களுக்கு மேல் எடுப்பவர்களுக்கும் பதினொன்றாம் மற்றும் பனிரெண்டாம் வகுப்புகளில் 500 மதிப்பெண்களுக்கு மேல் எடுக்கும் தென்காசி தொகுதிக்குட்பட்ட அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு ஊக்க பரிசாக ரூபாய் பத்தாயிரம் வரை தனது சொந்த நிதியிலிருந்து வழங்குவிருப்பதாகவும் தென்காசி எம்எல்ஏ செல்வ மோகன்தாஸ் பாண்டியன் தெரிவித்தார். முன்னதாக தலைமையாசிரியர் தங்கராஜ் வரவேற்று பேசினார்.
பின்னர் ரூபாய் 5 லட்சம் செலவில் மாணவ, மாணவியரின் பயன்பாட்டிற்கான டெஸ்ட் மற்றும் பெஞ்சுகளை பள்ளிக்கு வழங்கி ஊரகத் திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற யோகராஜ் என்ற மாணவருக்கு நினைவு பரிசு வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில் உதவி தலைமை ஆசிரியர் அருள்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர் இதேபோன்று வீரகேரளம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி, மற்றும் புனித அந்தோணியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அண்ணா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவியருக்கும் இலவச சைக்கிள்களை வழங்கினார்.